சினிமா செய்திகள்
தெருக்குரல் அறிவு
null

ஜெய்பீம்.. உண்மைதான் எப்போதும் வெல்லும்.. தெருக்குரல் அறிவு வைரல் பதிவு..

Published On 2022-08-01 10:39 GMT   |   Update On 2022-08-02 03:46 GMT
  • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
  • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் 'தெருக்குரல்' அறிவு ஆகியோரின் குரலில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'. ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா யூ-ட்யூப் தளத்தில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நிலமற்ற தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்து அவதிப்பட்ட வள்ளியம்மாள் உள்ளிட்ட சில மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் வெளியான இப்பாடல் பல நிகழ்ச்சிகளிலும் பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

தெருக்குரல் அறிவு

இதையடுத்து, சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தெருக்குரல் அறிவு தற்போது தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "என்ஜாய் எஞ்சாமி பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை.

அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன். இருப்பினும் இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக அது வள்ளியம்மாளின் வரலாறு இல்லையென்றோ என்னுடைய முன்னோரான நிலமற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வரலாறு இல்லையென்றோ ஆகிவிடாது.

என்னுடைய ஒவ்வொரு பாடலிலும் தலைமுறை தாண்டிய அடக்குமுறையின் தழும்புகள் இருக்கும். இந்தப் பாடலில் இருந்ததைப் போலவே. இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கின்றன. முன்னோர்களின் மூச்சை, வலியை, வாழ்க்கையை, அன்பை, எதிர்ப்பை, ஒட்டுமொத்தமாக அவர்களுடைய இருப்பைச் சுமந்துவரும் பாடல்கள். இவையெல்லாம் அழகிய பாடல்களாக உங்களுடன் பேசுகின்றன.

ஒரு தலைமுறையின் ரத்தத்தையும் வியர்வையையும் விடுதலையளிக்கும் கலையின் பாடல்களாக மாறியிருக்கிறோம். அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியை பாடல்களின் மூலமாக எடுத்துச் செல்கிறோம். நீங்கள் தூங்கும்போது உங்கள் சொத்தை யாராவது பறித்துச் செல்ல முடியும். ஆனால், விழித்திருக்கும்போது முடியாது. ஜெய்பீம். இறுதியில் உண்மைதான் எப்போதும் வெல்லும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு 'ரோலிங் ஸ்டோன் இந்தியா' என்ற ஆங்கில புத்தகத்தில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை பாராட்டும் வகையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் தெருக்குரல் அறிவின் பெயர் இடம்பெறவில்லை இதற்காக இயக்குனர் பா.ரஞ்சித் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




Full View


Tags:    

Similar News