சிகரத்தை நோக்கிச் சென்றவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது- வைரமுத்து இரங்கல்
- நடிகர் மாரிமுத்து, கவிஞர் வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.
- மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.
இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.
நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.