ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை இயக்குனர் நிறையவே கொடுத்தார்- விஜய் சேதுபதி
- 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- இப்படக்குழு மும்முரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தை இயக்கி இருந்தார். 'அந்தாதூன்' படம் தற்போது தமிழில் 'ரீமேக்' செய்யப்பட்டுள்ளது. 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.
பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதையடுத்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று 'மெர்ரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு மும்முரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய்சேதுபதி பேசியதாவது, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான முதல் படம் 'ஏக் ஹசீனா தி'. அது 2004-ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார். நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா? என்று எண்ணினேன். அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான 'பட்லாபூர்' எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது.
அதன் பிறகு என்னை சந்தித்து 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் அவர்களை தொடர்பு கொண்டு ஜனவரி மாதம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது. அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என கேட்டேன். உடனே அவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது.. பேச்சுவார்த்தை நடத்தியது, அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விஷயங்களை உரையாடியது, அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடமிருந்து அவர் வேலை வாங்குவது சவுகரியமானதாக இருக்கும். அவருடன் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.
கத்ரீனா கைப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம். அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட். இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார் என்ற பயமும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சவுகரியமாக மாற்றினார்.
நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'ஃபார்ஸி' படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். அது எப்படி பேசி இருக்கிறேன் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.
பணியாற்றும் இடத்தில்தான் மொழிகளுக்கு ஏற்ற ஒலி இருக்கும். அதை கேட்டு பேசுவதில் மட்டும் தான் வேறுபாடு இருக்கும், மற்ற அனைத்தும் ஒன்றுதான். தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்ட பிறகு மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை. இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.