ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்- விஷால் புகாருக்கு கருத்து தெரிவித்த மத்திய அரசு
- நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையடுத்து 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மும்பை சென்சார் போர்டுக்கு 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இந்தி வெர்ஷனுக்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக வழங்கியுள்ளதாகவும் இந்த பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தோம் என்றும் படத்தை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மகராஷ்டிரா முதல் மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, இது போன்று ஊழல் நடைபெற்றுள்ளதாக விஷால் தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஊழல்களில் மத்திய அரசு சகிப்பு தன்மையற்ற நிலையை கடைப்பிடித்து வருகிறது (ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்). யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இன்று மும்பை அனுப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று மத்திய தணிக்கைத்துறையால் அச்சுறுத்தல் அல்லது மிரட்டலுக்கு யாராவது ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான தகவல்களை வழங்கி மத்திய அரசுக்கு உதவுமாறும் கேட்டுள்ளது.