விஷால் புகார் எதிரொலி- சிபிஐ வழக்குப்பதிவு
- மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக விஷால் தெரிவித்திருந்தார்.
- யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையடுத்து 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், மும்பை சென்சார் போர்டுக்கு 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இந்தி வெர்ஷனுக்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக வழங்கியுள்ளதாகவும் இந்த பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தோம் என்றும் படத்தை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தோம் என்றும் கூறினார்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் மும்பை அனுப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சென்சார் போர்டு அதிகாரிகள் உட்பட இடைத்தரகராக செயல்பட்ட மெர்லின் மேனகா, ஜீட்டா ராம்தாஸ் மற்றும் ராஜன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.