கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை - எஸ்.ஏ. சந்திரசேகர் இரங்கல்
- நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
- அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் தே.மு.தி.க. கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழப்புக்கு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி ,கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை."
"அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்."
"திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை."
"அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.