சினிமா செய்திகள்

தங்கலான் படத்தை பா.ரஞ்சித் அவருக்கே உரிய பாணியில் படமாக்கியுள்ளார் - திருமாவளவன் பாராட்டு

Published On 2024-09-04 11:04 GMT   |   Update On 2024-09-04 11:04 GMT
  • இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்தார்.
  • தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியிருந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், "போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு. விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம்" என்று தெரிவித்திருந்தார்.

வாழை படத்தை பாராட்டிய திருமாவளவன் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியான பா ரஞ்சித்தின் தங்களின் படத்தை ஏன் பாராட்டவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணன் புகழேந்தி அவர்களோடு தங்கலான் திரைப்படம் காணும் வாய்ப்பு இன்று கிடைத்தது. தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது. சாதி வர்ணம் போன்ற்வற்றால் அடிமைப்பட்டு கிடந்த மக்களை விடுவிப்பதற்கு தங்களின் இருப்பிடத்திலிருந்து வெளியேறி கோலார் பகுதியில் புதைந்து கிடைக்கும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியை தங்கலான் தலைமை தாங்கி மேற்கொள்கிறார்.

அதில் அந்த மக்கள் சந்திக்கிற அவலங்களை வெளிப்படுத்தும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. ஒருபுறம் நிலக்கிழார்கள் செய்கிற கொடுமை இன்னொருபுறம் பிரிட்டிசார் செய்கிற அடக்குமுறை, இவற்றை எல்லாம் தாண்டி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த உழைக்கும் மக்கள் மேற்கொண்ட இந்த கடுமையான தங்கம் வெட்டி எடுக்கிற பணியை இந்த திரைப்படம் உணர்த்துகிறது.

இயக்குநர் பா ரஞ்சித் அவருக்கே உரிய பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். புனைவுகள் கலந்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை தருகிறது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News