சினிமா

சைபர் தாக்குதல்: மம்முட்டிக்கு ரசிகர்கள்- அரசியல் கட்சியினர் ஆதரவு

Published On 2024-05-15 04:24 GMT   |   Update On 2024-05-15 04:24 GMT
  • படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
  • திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

திருவனந்தபுரம்:

பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி நடித்த 'புழு'என்ற திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியது. ரதீனா என்பவர் இயக்கிய இந்த மலையாள திரைப்படத்திற்கு மம்முட்டியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த திரைப்படம் பிராமணர்களுக்கு எதிரானது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மம்முட்டிக்கு எதிர்ப்பு தெரவித்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். அந்த திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்முட்டிக்கு முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவர் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சின்குட்டி. அவர் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டி கேரளாவின் பெருமை' என்று குறிப்பிட்டு, மூத்த நடிகர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

அதேபோன்று மந்திரி ஏ.கே.ராஜன் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டியை முகமது குட்டி என்றும், நடிகர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கிறார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு. இதுபோன்ற வெறுப்பு அரசியலுக்கு கேரளாவில் இடமில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News