கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2025: அணிகள் மாறும் முக்கிய வீரர்கள்

Published On 2024-07-23 11:35 GMT   |   Update On 2024-07-23 11:35 GMT
  • மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி சிஎஸ்கே அணியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை:

ஐபிஎல் 2025-ம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 30 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மீண்டும் நடக்கவுள்ளது.

ஏற்கனவே பல்வேறு அணிகளும் தங்களின் கருத்துகளை கூறியுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிறைய வீரர்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

கடந்த சீசனில் குஜராத் அணியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை திடீரென மும்பை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அதற்கு ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். ஐபிஎல் விதிகளின்படி 3 இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியால் தக்க வைக்க முடியும். இதனால் ரோகித் சர்மாவை தக்க வைக்க முடியாது என்றே பார்க்கப்படுகிறது. இதனிடையே மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி மெகா ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால், பல்வேறு அணிகளும் அவரை வாங்க முயற்சிப்பார்கள். சீனியர் வீரர் என்றாலும் பிராண்ட் மதிப்புமிக்க என்பதும், டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பெயரும் ரோகித் சர்மாவுக்கு சாதகமாக அமையும்.

அதேபோல் ஆர்சிபி, லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட 3 அணிகளும் சரியான கேப்டன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவுடன் ரோகித் சர்மா நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். இதனால் லக்னோ அணியின் கேப்டன் பதவியை ரோகித் சர்மா ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

ரோகித் மட்டுமல்லாமல் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் மும்பை அணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போன ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணி உரிமையாளர் மைதானத்தில் வைத்து கேஎல் ராகுலை கடுமையாக கண்டித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்ப உள்ளார்.

இதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், சிஎஸ்கே அணிக்கு மாற உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

அடுத்த ஐபிஎல் தொடரில் 4 அணியின் கேப்டன் மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News