பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அறிவிப்பு
- டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்தது.
- சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் - மந்திரி மொஹ்சின் நக்வி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது மொஹ்சின் ரசா நக்வி 3 வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2022 முதல் வாரிய விவகாரங்களை நடத்தி வந்த இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த 4-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து தற்போது கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சையது மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையும், பணிவும் அடைகிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நாட்டில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்கும் நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு மொஹ்சின் நக்வி கூறினார்.