பிரதமர் மோடி முதலில் கண்ணாடியை பார்க்க வேண்டும்: ஊழல் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி
- ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி விசாரணை நடத்துவதற்காக பா.ஜனதா 300 மத்திய குழுவை மேற்கு வங்காள மாநிலத்திற்கு அனுப்பியது.
- ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொய்னாகுரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி விசாரணை நடத்துவதற்காக பா.ஜனதா 300 மத்திய குழுவை மேற்கு வங்காள மாநிலத்திற்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி என்ன ஆனது என்பது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி தற்போது பதில் சொல்லியாக வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வேலைப்பார்த்த ஏழை மக்கள் இன்னும் சம்பளம் பெறவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என பிரதமர் மோடி கூறுகிறார். அவர் முதலில கண்ணாடியைபார்க்க வேண்டும். அவரது கட்சி ஊழலால் நிறைந்துள்ளது.
பா.ஜனதா பெங்கால் எதிர்ப்பு கட்சி. பா.ஜனதா என்ஆர்சி போர்வையில் பழங்குடியினர், தலித்கள் மற்றும் ஓபிசி-களை வெறியேற்ற திட்டமிட்டுள்ளது. என்ஆர்சி-ஐ நாங்கள் பெங்காலில் அனுமதிக்க மாட்டோம்.
பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் பா.ஜனதாவை எதிர்த்து வருகிறது. ஆனால், இரண்டு எதிர்க்கட்சிகள் அவற்றுடன் பணியாற்றி வருகிறது. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளோம். ஆனால், நாட்டை காப்பாற்ற பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.