ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

வெற்றியும் தோல்வியும் இயல்பானது

Published On 2022-03-04 04:08 GMT   |   Update On 2022-03-04 04:08 GMT
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை சற்று நோக்குங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் தான் அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது.
ஆண்டவரே நீரே என் கடவுள் நான் உம்மை மேன்மைப்படுத்துவேன். உம் பெயரை போற்றுவேன். நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர். (ஏசாயா 25:1)

ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் தனிமையில் அமருங்கள். உங்கள் லட்சிய கனவுகளை எண்ணிப்பாருங்கள். நீங்கள் நினைத்தது கிடைத்து விட்டது போன்று மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்று விடுவீர்கள், என்று மனத்தத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நமது கனவுகள் நியாயமானவை. அர்த்தமுள்ளவை. நமது கனவுகளை நாம் தான் வளர்த்து கொள்ள வேண்டும். கனவுகள் நமது நனவுகளை இனிமையாக்கி இருக்கிறது என்பது உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை எடுத்துக்கொள்வோம். யாரோ ஒருவருடைய கற்பனை திறமை தான் இது. முதலில் அந்த கண்டுபிடிப்பு எப்படி இருக்கும் என்று விஞ்ஞானி சிந்திக்கிறார். எவ்வகையில் சாத்தியம் என்று தன்னைத்தானே திட்டமிடுகிறார். அதற்கான கருவிகளை வைத்து சோதனை செய்கிறார். சோதனையின்படி நிலைகளை வேறு வேறு விதங்களில் மாற்றியமைக்கிறார். நிறைவான வெற்றி பெறுகிறார். புதிய கண்டுபிடிப்பு உருவாகிறது.

இப்படி சிந்திக்கின்ற போது பல வெற்றிகளை நாம் வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியும். சிந்தனை என்ற கருவியை எடுத்து வாழ்வில் செயல்படுங்கள். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் இரு பக்கங்கள். தோல்வியை காணாத மனிதன் முழுமனிதம் அல்ல என்கிறார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை சற்று நோக்குங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட  தோல்விகள் தான் அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது. வளைத்து கொடுப்பது என்பது அத்தனை சுலபமல்ல. அதற்கு சாதூரியம், எதையும் தாங்கும் இதயம் பெற்றிருக்க வேண்டும்.

அதனை பின்பற்றிய மனிதர்கள் வாழ்க்கையே வரலாறாக மாறி இருக்கிறது. ஒரு மனிதனின் உண்மையான வெற்றி அவன் அடைந்த தோல்வியிலேயே ஆரம்பிக்கிறது.

பொதுவாக வெற்றியின் பாதை மிகவும் நீளமானது. வெற்றியை தொடும் வரை இடையில் இடஞ்சல்கள் தோன்றும். வெற்றி...வெற்றி...என ஏக்கம் கொள்ளும் போது வெற்றி வந்தடைகிறது.

-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

Similar News