சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அருகே உள்ள குறைதீர்க்கும் 5 புனித தீர்த்தங்கள்
- சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
- அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
சக்தி தீர்த்தம்
தென்னகத்தின் பெருமைமிக்க காவேரியின் உபநதியான வெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் தெற்கு தேரோடும் வீதியின் தென்புறத்தில் உள்ள புகழ்பெற்ற தீர்த்தமாகும். இத்தீர்த்தம் அருகே உள்ள படித்துறையில் சுப்பிரமணிய கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களது முடி காணிக்கையினையும், புனித நீராடுதலையும், ஆதி முதல் இன்றளவும் இங்கு மேற்கொள்வதை வழக்கமாக கொள்கின்றனர். அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இங்கு நீராடி வழிபாடு மேற்கொண்ட பின்னரே பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணத்தை செய்து முடிப்பர். இங்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், ஆடி 18 தீர்த்தவாரியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. அதுசமயம் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் இத்தீர்த்தத்தில் நீராடி மகாமாரியின் அருளை பெற்று செல்கிறார்கள்.
மகமாயி தீர்த்தம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வடமேற்கே, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜய நகர நாயக்கர் கால கோவில் திருப்பணிகளில் இந்த குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்று இருப்பதையும் காணமுடிகிறது.
இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டுவரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வெளியேறும், நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பாகும். பிற காலங்களில் மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்பஉற்சவபெருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு முதல் நாளும், சித்திரை தெப்பமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாட்களில் மாரியம்மன் மேற்கு கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறாள்.
முற்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இக்குளம் தற்போது கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்தி வருவது இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்கு ளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற ஐதீகமும் உள்ளது.
சர்வேஸ்வரன் தீர்த்தம்
இத்தீர்த்தம் வடமேற்கேயுள்ள வாயு மூலையில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலின் தீர்த்த வளாக பகுதியில் கோவில் பணியாளர் குடியிருப்புகள் உள்ளன. புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகா மகத்திற்கு முன்பும், கங்கா தேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகணம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமக குளத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தான் வரலாற்று சிறப்பு பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்கு பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தத்தை தன்னகத்தே அதிசய மகாமக தீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கி யதாக காணப்படுகிறது. இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தத்தில் கும்பகோணத்தில் நடைபெறும் ஒவ்வொரு மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின்போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச்செல்வது வழக்கம்.
ஜடாயு தீர்த்தம்
கனகாம்பிகை உடனுறை ஸ்ரீமுக்தீஸ்வரர் கோவிலின் தெற்கேயும், மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கேயும் அமைந்திருப்பது வரலாற்று சிறப்பு பெற்ற ஜடாயு தீர்த்தமாகும். ஜடாயுவிற்கு இறைவன் முக்தி கொடுத்ததாக கூறப்படும் புகழ்பெற்ற தலம் இதுவே ஆகும். ஜடாயுவின் தாகத்தை தணிக்கவும், ராவணன் சீதையை கடத்தி சென்ற விபரத்தை ராமனிடம் கூறும்வரை தன் உயிர் பிரியாமல் இருக்க ஜடாயு மகேஸ்வரனிடம் வேண்ட மகேஸ்வரனால் பிரசித்தி பெற்றதாகவும் இத்தீர்த்தம் கருதப்படுகிறது. இன்றும் வற்றாத நீர்நிலையை கொண்டு இந்த தீர்த்தம் விளங்குகிறது. மேலும் உயிர்பிரிந்த ஜடாயு தன்னுடைய தந்தை தசரதனுக்கு நண்பன் என்பதால் ஜடாயுவிற்கு ஈமக்கடன்களை செய்ய ராமன் முடிவு செய்தான். தன் கை அம்பினால் ராமன் பூமியில் நீர் ஊற்று ஒன்றினை உண்டாக்கினான். அதுவே ஜடாயு தீர்த்தம் என்பதாயிற்று என்ற மற்றொரு புராண குறிப்பும் இதற்கு கூறப்படுகிறது.
கங்கை தீர்த்தம்
இக்கோவிலின் உப கோவிலான உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலின் கிழக்கில் அமைந்திருப்பது கங்கை தீர்த்தமாகும். இது அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கே அமைய பெற்றுள்ளது. காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என கொண்டி ருந்த விக்கிரமாதித்தன் தமது இஷ்ட தேவதையான காளி பூஜைக்கு நித்திய பூஜைகளை செய்ய கங்கா தேவியிடம் வேண்டினான். கங்கையும் அங்கு பிரத்தியம்சமாய் தோன்றினாள். இதுவே கங்கை தீர்த்தம் என்னும் வற்றாத தீர்த்தமாகும். மகளிவனத்து மாகாளி வீற்றிருக்கும் இந்த இடத்திலுள்ள தீர்த்தம் வற்றாத தன்மையை கொண்டதாகும். திருமண தடைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
மூளைக்கோளாறு, குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்த அற்புத மருந்தாக இந்த புனித தீர்த்தம் இன்றும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகிறது.
அம்பாளின் அளவிலா கருணையினாலும், பேரொளியினாலும் இந்த தீர்த்தத்தை பயன்படுத்தும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நிலைகளில் நலன் பயப்பதாக அறியப்படுகிறது. அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும். செய்வினை மற்றும் மந்திர சக்தியை இக்கோவில் தீர்த்தம் கட்டுப்படுத்தும். அனைத்து திருக்கோவில்களிலும் இறை சக்தியை நிலை நிறுத்த இத்தீர்த்தம் மிகப்புனிதமாக பயன்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் புனித தீர்த்தம், காவேரியின் உபநதியாக இருப்பதால் இதில் குளித்தவுடன் சகலவித பாவங்களும், வியாதிகளும் அம்பாளின் அனுக்கிரகத்தால் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இப்புனித நீரில் அம்பாளின் நாமத்தை மூன்று முறை உச்சரித்து மூழ்கி எழுந்தால் இதுவரை கண்டிராத உள்ளத்தூய்மை, உடல் தூய்மை ஆகியன ஏற்பட்டு புத்துணர்ச்சியை அடைந்து மக்கள் மனநிறைவு பெறுவது கண்
கொள்ளா காட்சியாகும்.