கடன் வகைகளும்... ஜோதிட ரீதியாக கடன் ஏற்படக்காரணங்கள்...
- புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கும்.
- குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியில் சிக்க வைக்கிறது.
குடும்ப கடன்
1, 2, 6-ம் பாவகங்கள் ஒன்றோடொன்று இணைவு பெறும் போது ஜாதகரின் நடவடிக்கையாலும், குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காகவும் நோயினாலும் கடன் ஏற்படுகிறது. 1,3,6,8,12-ம் பாவக இணைவால் போலீஸ், கோர்ட், கேஸ், கட்டப்பஞ்சாயத்து, நஷ்டம் அவமானமும், தற்கொலை எண்ணம், சிறை தண்டனையும் உண்டாகும் இவர்களில் பெரும்பான்மையானோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள். 6, 7-ம் பாவக இணைவால் தொழில் கூட்டாளியாலும், களத்திரத்தின் மூலமும் கடன் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு 6, 7-ம் பாவகம் தொடர்பு இருக்கக் கூடாது. 6, 7, 8-ம் பாவக தொடர்பு பெற்ற தம்பதியினர் மற்றும் தொழில் கூட்டாளிகள், போலீஸ் கோர்ட், கேஸ், விவாகரத்து என்று அலைந்தே பாதி வாழ் நாளை தொலைத்து எஞ்சிய வாழ்நாளில் விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்று தவறான முடிவு எடுக்கிறார்கள். பல சந்தர்பங்களில் கணவனால், மனைவியும், மனைவியால் கணவனும் கடன் தொல்லையால் பிரிகிறார்கள். 5,6,9-ம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்ற கடன், பூர்வீகச் சொத்து வழக்கு, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மூலமும் உருவாகும்.
தொழில் கடன்
6, 10-ம் பாவக இணைவால் தொழில் இழப்பு, தொழில் நட்டமும் ஏற்படுகிறது. இத்துடன் சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் தொழில் நிர்வாகத்திற்கும், ஆடம்பரத்திற்கும் செலவு செய்தே கடனாளியாகிறார்கள். 6,7,10-ம் பாவகம் தொடர்பு பெற்றவர்கள் கூட்டுத் தொழிலால் கடனாளியாகிறார்கள்.
நம்பிக்கைத் துரோக கடன்
3, 11-ம் பாவகம் 6-ம் பாவகத்தோடு இணைவு பெறும் போது உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாலும், இளைய மனைவியாலும், காதலர்கள் அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது போன்றவைகளாலும் ஏற்படுகிறது. 6-ம், 6-ம் இணைவு பெற்றால் பரிவு மிகுதியால் ஜாமின் போட்டு கடனையும் சத்ருவையும் உருவாக்கி வட்டிக்கு வட்டிகட்டி சொல்ல முடியாத துயரம் ஏற்படும்.
சுப கடன்
4 மற்றும் 6-ம் பாவக இணைவால் வீடு, வாகனம், நிலம், விவசாயம், தாய் மற்றும் தாய் வழி உறவினர் மூலமும் கடன் உருவாகும். சுகஸ்தானத்தில் கோச்சார அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி பயணம் செய்யும் போது நகை அடமானத்திற்கு சென்று விடுகிறது. 5, 6-ம் பாவகம் இணைவால் குழந்தைகளின் கல்வி, திருமணம், நோயினால் கடன் ஏற்படும்.
பேராசை கடன்
6-ம் அதிபதி 11-ம் அதிபதியுடன் சம்மந்தப்பட்டால் மூத்த சகோதரிகளால் நஷ்டம், கடன் உருவாகும். சிலர் பேராசை மிகுதியால் உத்தியோகத்தில் இருக்கும் காலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அல்லது சேர்மார்க்கெட், சூதாட்டத்தால் கடன்படுகிறார்கள். சிலர் ஆடம்பரச் செலவினால் கடனை விலை கொடுத்து வாங்குகிறார்கள். சிலர் இளைய தாரம் எனும் வைப்பாட்டி கொடுமையால் உடம்பில் உயிரைத் தவிர மீதி அனைத்தையும் கடனுக்காக இழக்கிறார்கள். தங்களுடைய வரவிற்கு அதிகமாக கடன் வாங்கிய பலர் கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் பணக்காரனாக வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள். 6-ம் அதிபதியுடன் புதன், குரு, ராகு, கேதுக்கள் இணைவு பெறும் போதும் தசா நடக்கும் போதும் 80 சதவீதம் பேர் தங்களின் தகுதிக்கு மீறிய கடனை சுமக்கிறார்கள். புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையையும், குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியிலும் சிக்க வைக்கிறது. ஜனன கால ஜாதகத்தில் குரு, ராகு கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும் நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும்.