தோஷ பரிகாரங்கள்

அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் கரம்பயம் முத்துமாாியம்மன்

Published On 2023-02-13 05:02 GMT   |   Update On 2023-02-13 05:02 GMT
  • பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன.
  • தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது.

கோடை காலத்தில் பரவும் அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில், பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கரம்பயம் மட்டுமின்றி கரம்பயத்தை சுற்றியுள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அருகில் உள்ள நகர மக்களில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை அழைத்து வந்து கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து தீர்த்தம் என்று சொல்லக்கூடிய அபிஷேக பால் வாங்கி கொடுப்பார்கள்.

நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர்கள் நோய் பூரண குணமடைந்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு நேர்த்திக்கடனாக முடி இறக்கி காணிக்கை செலுத்துவது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, வடம் பிடித்து தேர் இழுப்பது உள்ளிட்ட வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா வந்து பொதுமக்களை பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்படும் பக்தா்கள் நோய் தீர்ந்த உடன் இ்ந்த கோவில் தீா்த்தக்குளத்தில் நீராடி பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தா்களும் தீர்த்தக்குளத்தில் உள்ள புனித நீரை தங்கள் தலையில் தெளித்த பின் கோவிலுக்கு செல்கிறாா்கள்.

தீர்த்தக்குளத்தில் அம்மை நோய் தீர்க்கும் அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்து மாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் 7 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள கோவிலை அடையலாம்.

Tags:    

Similar News