- சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.
- முருகன் கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.
திருவாரூர் -கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீஅபினாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் திருமண வரம் தரும் கடவுளாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி உள்ளார்.
18 படிகள் ஏறிச் சென்று மூலவரை தரிசிக்கும் அமைப்புடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரரை ஆயிரம் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத நோயும் தீரும். சுக்கிரன், இந்தத் தலத்தின் சரவணப் பொய்கையில் நீராடி, தவம் இருந்து, இழந்த சக்தியைச் திரும்பப் பெற்றார். எனவே, சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.
ஸ்ரீசுப்பிரமணியர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்பொன்னும் பொருளும் அருள்வதுடன், திருமண வரமும் வழங்குகிறார். வள்ளியைக் கரம்பிடிக்க விரும்பிய முருகன், இந்தத் தலத்துக்கு வந்து பரமசிவனையும் பார்வதியையும் வேண்டி தவம் செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். பிறகு, சிவ-பார்வதியின் ஆசியோடும், அண்ணன் விநாயகரின் துணையோடும் வள்ளிமலையில் ஸ்ரீவள்ளியை மணம் செய்து கொண்டார்.
தனது திருமணம் நிறைவேற பெற்றோரின் ஆசி கிடைத்த இந்தத் தலத்தில், பக்தர்களின் திருமண பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற முருகன் சித்தம் கொண்டு கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.
வேலவன் வழிபட்டதால், இந்த ஊருக்கு வேளூர் என்றும் பெயர் உண்டு. இந்த தலத்தில் உள்ள சரவண பொய்கையில் நீராடி, முருகனை வழிபட்டால், திருமண தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வம் பெருகும்.