தோஷ பரிகாரங்கள்

சூரிய கிரகண தோஷத்தை தீர்க்கும் பரிகாரம்...

Published On 2022-10-19 04:49 GMT   |   Update On 2022-10-19 04:49 GMT
  • 25-ம்தேதி பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை சூரிய கிரகணம் சம்பவிக்கப் போகிறது.
  • இந்த சூரிய கிரகணம் 2022-ம் ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம்.

கிரகண காலத்திற்கு முன், பின் 7 நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும்.கிரகண காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு சற்று கடுமையாக இருக்கும். சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தை வழி கர்மாவையும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய் வழிக் கர்மாவையும் அதிகம் சுமந்து பிறக்கும்.

கிரகணம் சம்பவிக்கும் போது ராகு, கேது, சூரியன், சந்திரன் இணைவு பெறும் கிரகங்களும் அந்த சொந்த பாவகமும், நின்ற பாவகங்களும் பாதிக்கப்படும். கிரகணத்தில் பிறந்த ஜாதகருக்கு சூரியன் + ராகு, கேது அல்லது சந்திரன் + ராகு, கேது சேர்க்கை இருக்கும். இந்த கிரக இணைவை குரு பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ சூட்சம சக்திகள் இருக்கும் . தீய சக்திகள், பில்லி சூனியம், மாந்தரீகம், செய்வினை எளிதில் தாக்காது.

புண்ணிய பலன் மிகுந்து கொண்டே இருக்கும். கிரகணத்தில பிறந்தவர்களுக்கு சூரியன் + ராகு, கேது சேர்க்கையுடன் சனி, செவ்வாய் தொடர்பு பெற்றால் உடல் ஊனம் நோய் தாக்கம், மன வளர்ச்சி குறைவு, ஆயுள் குறைவு, தீராத கடன், வறுமை, வம்பு வழக்கு, முன்னேற்றக் குறைவு, போதிய கல்வியின்மை, திருமணத்தடையாலும் பெரும் பாதிப்பை அடைகின்றனர். திருமணத் தடையை சந்திப்பவர்களில் தலைகீழாக நின்றும் திருமணமே நடக்காதவர்கள் சிலர் கிரகண காலங்களில் பிறந்தவர்கள். அப்படி என்ன பாவம் செய்து கிரகண காலத்தில் பிறந்தார்கள் என்ற கேள்வி வாசகர்களுக்கு இங்கே எழும்.

மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் மற்றும் பிரபஞ்ச நியதிக்கு எதிரான பின்வரும் காரியங்களில் ஈடுபட்டதன் வினைப் பதிவாகும். வட்டித்தொழில் செய்தவர்கள், காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது,பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது, பசுக்களை, விலங்குகளை வதைப்பது, இயற்கையை மாசுபடுத்துவது, நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்றவையாகும்.

கிரகண தோஷத்தை பாதிப்பை கிரகண கால வழிபாட்டின் மூலமே தீர்க்க முடியும்.

ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான சுப வருடம் ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 திருக்கணித பஞ்சாங்கப்படி செவ்வாய்கிழமை அமாவாசையன்று பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் காலபுருஷ 7-ம் இடமான துலாம் ராசியில் சம்பவிக்கப் போகிறது.

இந்தியாவில் தெரியும் இந்த சூரிய கிரகணம் 2022-ம் ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம். சூரியன், சந்திரனுக்கு ராகு, கேது சம்பந்தம் இருப்பது கடுமையான பித்ரு தோஷம்.அந்த கிரகண நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும்.

ஜனன கால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷத்தால், கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாக பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும். சூரிய கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வதால் ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும்.

Tags:    

Similar News