முக்கிய விரதங்கள்

ஆலங்குடி குரு பகவானை விரதம் இருந்து எப்படி வழிபட வேண்டும்?

Published On 2022-11-10 04:17 GMT   |   Update On 2022-11-10 04:17 GMT
  • பாவங்களைப் போக்குபவர் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆயிற்றே.
  • வியாழக்கிழமையில் திரளான பக்தர்கள் வந்து குருவை ஆராதித்துச் செல்கிறார்கள்.

ஆலங்குடியைப்பொறுத்தவரை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் தரிசனம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியே குரு பகவானாக, நவக்கிரக தோஷத்தை நீக்குபவராக வழிபடப்படுகிறார். வருடத்துக்கு ஒருமுறை நிகழும் குருப்பெயர்ச்சியின் போது இங்கே லட்சார்ச்சனை நடைபெறும்.

ஆலய பிரகாரத்திலேயே நெய் தீபங்கள் கிடைக்கின்றன. 25 தீபங்கள் வாங்க வேண்டும். அதில், முதல் தீபத்தைக் கலங்காமல் காத்த விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, மவுனமாக பிரகார வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து வணங்கி விட்டு, குரு பகவானுக்குப் பரிகாரமாக நாம் ஏற்ற வேண்டிய 24 தீபங்களையும் ஏற்றி வைக்க வேண்டும்.

'மொத்தமாக தீபங்களை ஏற்றக்கூடாது. 24 சுற்றுக்கள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்' என்ற நடைமுறையும் இங்கே சொல்லப்படுகிறது. தீபங்கள் ஏற்றுவதற்கு முன் ஆலய அர்ச்சகரை ஒரு முறை கலந்தாலோசித்துவிட்டுச் செய்வது உத்தமம்.

பிரம்மனின் மூல மந்திரம் 24 என்கிற எண்ணிக்கையில் இருப்பதால், இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இப்படிச் செய்வதால், குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் விலகுகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானின் அருள் பெற்ற பின்னர் திருக்கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் கொடி மரத்தின் கீழே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது தல புராணம்.

சுயம்பு லிங்க மூர்த்தியான ஆபத்சகாயேஸ்வரரின் புராணக் கதைகள் இன்னும் முடிவில்லை. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் குருவை தரிசிப்பதில் எந்த அளவுக்கு முனைப்பாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஈசனான ஆபத்சகாயேஸ்வரரையும் தரிசிக்க வேண்டும். அவர்தம் தேவியான ஏலவார் குழலம்மையையும் வணங்க வேண்டும். எத்தகைய கொடுஞ்செயல்கள் புரிந்தவனும், ஆலங்குடி சேத்திரம் வந்து, 'ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்று இறைவா' என்று வேண்டித் துதித்தால், ஆபத்சகாயேஸ்வரர் மன்னித்து அருள்வதாகத் தல புராணம் சொல்கிறது.

சுவாசனன் என்பவன் ஓர் அரசன். ஆனால், கொடுங் கோலன். நாட்டு மக்களைத் துன்புறுத்தியே வாழ்ந்தான். அவனது அட்டூழியத்தைத் தாங்க முடியாத பிற மன் னர்கள், அவனைக் கொன்றுவிட்டனர். எம தூதர்கள் வந்து அவனை எமலோகம் இழுத்துச் சென்றனர். அவன் செய்த பாவங்களைப் பட்டியலிட்டு கூறினர் எமதர்மனிடம். 'இத்தகைய கொடுங்கோலனான இவன் பூலோகத்தில் பிசாசாக அலைய வேண்டியது விதி' என்று எமன் சொல்ல, அதன்படி பூலோகத்தில் பிசாசாகத் திரிந்தான். முன் ஜென்மத்தில் செய்த நல்வினைப் பலனால், அகத்திய மாமுனியைச் சந்தித்தான் சுவாசனன். அவரது அறிவுரைப்படி, காசி ஆரண்யம் எனப் படும் ஆலங்குடித் திருத்தலம் வந்து புனித நீராடி, ஸ்ரீஆபத் சகாயேஸ்வரரை தரிசித்தான்.

பாவங்களைப் போக்குபவர் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆயிற்றே! சுவாசனனது பாவங்கள் அனைத்தையும் விலக்கி, அவன் இழந்த செல்வத்தையும், ராஜ்யத்தையும் திரும்பக் கொடுத்தாராம் இந்த ஈசன்.

ஆலயத்தினுள் எண்ணற்ற திருமேனிகளின் தரிசனம் காணலாம். கலங்காமல் காத்த விநாயகரை வணங்கி உள்ளே நுழைந்தால் முதல் பிரகாரம். எதிரே தெற்கு நோக்கிய ஏலவார் குழலி அம்மையின் தரிசனம். கொஞ்சம் உள்ளே போய் மேற்கு நோக்கித் திரும்பி இரண்டாவது வாயிலைக் கடந்ததும், உள்ளே சூரிய பகவான், உத்சவர் சுந்தரமூர்த்தி, சோமாஸ்கந்தர் தரிசனம்.

இதை அடுத்து நால்வர், சூரியேசர், சோமேசர், குரு மோகே சுரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரம்மேசர் ஆகிய லிங்கத் திருமேனிகளின் தரிசனத்தோடு காசி விசுவநாதர், விசாலாட்சி மற்றும் அகத்தியரையும் வணங்கிப் பேறு பெறலாம். தொடர்ந்து தரிசனத்தில் நின்ற கணபதி, வள்ளி, தெய் வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கல்யாண சாஸ்தா, சப்தமாதா, நவக்கிரகம், ஸ்ரீநடராஜர், பைரவர், சந்திர பகவான் என்று தரிசனம் நீள்கிறது. கோஷ்டத்தில் காட்சி தரும் ஸ்ரீலிங் கோத்பவரும், சுக்கிரவார அம்மன் சந்நிதியும் அவசியம் தரிசிக்க வேண்டியவை.

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் திரளான பக்தர்கள் வந்திருந்து குருவை ஆராதித்துச் செல்கிறார்கள். குருப்பெயர்ச்சி காலம் என்றால், கூட்டத்துக்கும் கோலாகலத்துக்கும் கேட்கவே வேண்டாம். ஆலங்குடி திமிலோகப்படும். குருவின் பார்வை என்பது ஒவ்வொரு ஜாதகருக்கும் முக்கியம். குருவின் பார்வை சிறக்காததால்தான், பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போக நேரிட்டது. வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்கும்படி ஆனது. ஒரு ஜாதகத்தில் சுலபமான இடத்தில் குருவின் பார்வை விழுந்தால்தான், அந்த ஜாதகரின் வாழ்க்கை சிறக்கும். உத்தியோகம், குழந்தைப் பேறு உள்ளிட்ட பல வளங்களையும் வழங்குபவர் குரு பகவான்.

மூலவர் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வணங்க, ஆலயத்தில் கட்டணம் கட்ட வேண்டும். உத்சவருக்கு அபிஷேகம் என்றால், கட்டணம் கட்ட வேண்டும். அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பதித்த இரண்டு கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குரு பகவானின் அனுகிரகம் பெற விரும்புவோர், வியாழக் கிழமைகளில் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அபிஷேகம் செய்து, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, வெண் முல்லைப் பூக்களால் அலங்காரம் செய்து, கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வது நல்லது.

கொட்டிக் கொடுப்பவர் குரு, குருவை வணங்கினால் கோடி நன்மை என்றெல்லாம் சொல்வர். இத்தகைய சிறப்புகள் பெற்ற ஆலங்குடி குரு பகவானை, குடும்பத்துடன் சென்று வழிபட்டு பயன்பெறலாம்.

Tags:    

Similar News