இன்று ஆவணி அமாவாசை... விரதம் இருந்து செய்ய வேண்டியவை...
- ஆவணி அமாவாசை இன்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்குகிறது.
- தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும்.
இன்று (வெள்ளிக்கிழமை) ஆவணி அமாவாசை தினம்.
தமிழர்களின் ஜோதிட கணக்கின்படி சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆவணி மாதம் என கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே தான் இம்மாதத்தை சிங்க மாதம் எனவும் அழைக்கின்றனர்.
இம்மாதத்தில் வருகின்ற பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
ஆவணி அமாவாசை இன்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்குவதால் இன்று காலை அமாவாசை தர்ப்பணம், திதி போன்ற சடங்குகளை செய்யலாம். ஆவணி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.
தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும். பின்பு இந்த தர்ப்பணம் சடங்கு நன்றாக அமைய தேவர்களின் நாயகனாகிய விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபட வேண்டும். அல்லது மானசீகமாக வழிபடலாம்.
பின்பு உங்கள் தாய்வழி மற்றும் தந்தை வழி முன்னோர்களை மனதில் நினைத்து, வேதியர்கள் கூறும் மந்திரங்களை திரும்ப கூறி, அரிசி பிண்டத்தில் கருப்பு எள் போட்டு, அதில் தூய்மையான நீரை சிறிது விட வேண்டும். கருப்பு எள் சனி பகவானின் ஆதிபத்தியம் கொண்டது. இதை இச்சடங்கில் பயன்படுத்துவதால் ஆயுள் காரகனாகிய சனி பகவானின் அருளாசி ஒருவருக்கு கிடைக்கின்றது. வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.
ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் கஷ்ட நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.