முக்கிய விரதங்கள்

நாளை மாசி மாத கிருத்திகை... விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

Published On 2023-02-25 08:17 GMT   |   Update On 2023-02-25 08:17 GMT
  • கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம்.
  • வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும்.

தெய்வங்களின் திருவருளைப் பெரிதும் பெறுவதற்கு அருந்துணை புரிவன விரதங்கள் ஆகும். முறையாக விரதங்களை மேற்கொண்டு ஒழுகினால் நிறைவான வாழ்வு பெறலாம். இவைகளை திதி, வார, நக்ஷத்திர விரதங்கள் என்பர்.

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.

முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் மாதம் தோறும் வரும் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Tags:    

Similar News