கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடக்கம்
- சாம்பல் புதன் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஏப்ரல் 7-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது.
கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் பண்டிகை. சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்தெழும் நாளை ஈஸ்டர் பண்டிகையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருப்பார்கள். அந்த நாட்கள் தவக்காலம், லெந்து நாட்கள், கஸ்தி நாட்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
அதன்படி, சாம்பல் புதன்கிழமை தினத்தில் இருந்து இந்த 40 நாட்கள் உபவாசத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த சாம்பல் புதன் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று வழிபாடுகள் நடத்தப்படும்.
40 நாட்கள் தவக்காலத்தை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன் பின்னர் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது.
அதில் இருந்து 3-வது நாள், அதாவது ஏப்ரல் 9-ந் தேதி இயேசுகிறிஸ்து உயிர்ந்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.