விரதம் இருந்து கந்தன் புகழ்பாட கவலை நீங்கும்
- ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான்.
- முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும்.
ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பூசத்தில் வழிபாடு செய்யுங்கள் என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான். நமது ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலை, அதன் பலம் அறிந்து, நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும் ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் உடனுக்குடன் நற்பலன்களைக் காணலாம்.
அந்த அடிப்படையில் தை மாத பூச நட்சத்திரமன்று, முருகப்பெருமான் ஆலயத்துக்கு சென்று 'ஓம்' என்ற பிரணவத்தின் பொருளை போதித்து தகப்பன்சாமியை வழிபட்டால், சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். தைப்பூச திருநாளில் "வேலை வணங்குவதே வேலை" எனக் கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும். தைப்பூசத்தன்று கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். பாதயாத்திரை செல்ல இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.
பன்னிரு கரத்தாலும் அவன் அள்ளிக் கொடுப்பதால்தான், அவன் 'வள்ளல்' என்று பெயர் பெறுகிறான். வேலால் சூரபத்மனை வென்று அவனை சேவலும், மயிலுமாக மாற்றிய பெருமை முருகப்பெருமானுக்கு உண்டு. பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தரப்பம் நெய்வேத்தியம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் கவலைகள் எல்லாம் நீங்கும்.