நாளை தண்ணீர் கூட அருந்தாமல் அனுஷ்டிக்கும் நிர்ஜலா ஏகாதசி விரதம்...
- வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர்.
- அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர். கலி தோஷத்தால் ஏற்படும் பாபங்களையும் துன்பங்களையும் போக்கும் சக்தி ஏகாதசி உபவாசத்துக்கு உண்டு. ஆகவே தான் 8 வயது முதல் 80 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் ஏகாதசியன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.
பஞ்சபாண்டவர்களுக்குள் பீமன் மிகவும் பலம் பொருந்தியவர். அதற்குத் தக்க பலமான ஆகாரம் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர். ஒரு சமயம் பீமன் வேதவ்யாஸ் மகரிஷியிடம் சென்று 'எனது வீட்டில் சகோதரர்களும், தாயாரும், மனைவியும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் என்னையும் அனுஷ்டிக்குமாறு கூறுகின்றார்கள். எனக்கும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் என்னால் உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது என்பது இயலாத காரியம் என்ன செய்வது? என்று கேட்டார் பீமன்.
ஸ்ரீவேதவியாசரும் சிரித்துக்கொண்டே, பீமா! உன்னால் ஆண்டு முழுவதும் வரும் 25 ஏகாதசியிலும் உபவாசம் இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனி மாத சுக்லபட்ச (நிர்ஜலா) ஏகாதசியன்று மட்டும் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் இரு. அதுவே ஆண்டு முழுவதும் அனைத்து ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலனை உனக்குத்தரும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதை பீமனிடம் கூறினார்.
பீமனும் அவ்வாறே நிர்ஜல ஏகாதசியன்று சுத்த உபவாசம் இருந்து துவாதசியன்று சாப்பிட்டார். அது முதல் இந்த நாளுக்கு பீம ஏகாதசி என்றும், நிர்ஜல ஏகாதசி என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே நாளை எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஓரு வருடம் முழுவதும் ஏகாதசியன்று உபவாசம் இருந்த பலன் கிட்டும். அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional