முக்கிய விரதங்கள்

வராஹியை எந்த கிழமை விரதம் இருந்து வழிபட்டால் என்ன பிரச்சனை தீரும்...

Published On 2023-04-24 05:11 GMT   |   Update On 2023-04-24 05:11 GMT
  • சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.
  • வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹிதேவியை விரதம் இருந்து மனதார வழிபடுங்கள்.

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). வராஹ மூர்த்தியின் அம்சமே வாராஹியாவாள்.

வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை விரதம் இருந்து வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.

நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

கடன் தொல்லை அகல புதன் கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து ஸ்ரீ வராஹியை வழிபட வேண்டும்.

இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.

பஞ்சமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தேங்காய்ப் பூரணம், சர்க்கரைப் பொங்கல், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

அன்னை வராஹிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.

வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹிதேவியை விரதம் இருந்து மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வராஹி தேவி!

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News