முக்கிய விரதங்கள்

பங்குனி உத்திரம்: இன்று குலதெய்வத்தை வழிபட மறக்காதீங்க...

Published On 2023-04-05 05:28 GMT   |   Update On 2023-04-05 05:28 GMT
  • பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு.
  • பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.

பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (5-ந் தேதி) பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

இன்னொரு சிறப்பு... தமிழில், 12வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்!

முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம்.

தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகுமிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்!

இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். .

அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத் தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலை யாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங் குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெரு மாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால், திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.*

Tags:    

Similar News