புரட்டாசி சனிக்கிழமை விரத தினத்தில் செய்யக் கூடியது
- காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.
- ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.
பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள்.நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.
காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.
அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.
பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம்.
அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.
சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.
நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.
அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.
வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.