அழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை விரதம்
- ரம்பா திருதியை நாளை (மே 22-ந் தேதி) வருகிறது.
- கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும்.
குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர்.
ரம்பா திருதியை நாளை (மே 22-ந் தேதி) வருகிறது. சாபத்தால் அழகும் கவுரவமும் இழந்த ரம்பை இந்திரனிடம் பரிகாரம் கூற கேட்க 'பூலோகத்தில், பார்வதிதேவி கவுரியாக அவதரித்து மகிழமரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கும் தேவியை விரதமிருந்து வழிபட்டால், அருள் கிடைக்கும் என கூறினார்.
பூலோகத்தில் ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது. வைகாசி மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாகனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை.
பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, காட்சி தந்து மீண்டும் தேவலோக முதல் அழகியாக அருள் புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர அருளினாள்.
அவள் மேற்கொண்ட இந்த விரதம் "ரம்பா திருதியை" என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் சகல் சவுபாக்கியமும் அதிகரிக்குமென்றும் அருளினாள்.
ஆனி மாத வளர்பிறை திரிதியை அன்று (நாளை) ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழிவகுப்பார்கள்.
கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.