முக்கிய விரதங்கள்

திருமண தடையை ஏற்படுத்தும் சுக்கிர தோஷம்... விரதம் அனுஷ்டிக்கும் முறை...

Published On 2023-07-16 05:45 GMT   |   Update On 2023-07-16 05:45 GMT
  • சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.
  • மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.

ஒருவர் வாழ்க்கையில் அனைத்து சுக சௌக்கியங்களும் பெற்று, மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை பெற்றிருப்பது அவசியம். குறிப்பாக ஒருவரின் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் வலிமைப் பெற்றிருக்க வேண்டும். சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் கன்னியில் சேர்ந்திருந்தாலும் சுக்கிரனின் வலிமை குன்றிவிடும்.

மேலும், சுக்கிரன் லக்னத்துக்கு 8-ம் வீட்டில் இருப்பதும் சுக்கிர தோஷமாகும். அந்த 8-ம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளாகவோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிரனால் தோஷம் ஏற்படாது. சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்கள் ஒன்றில் மறைவு பெற்றிருப்பதும் தோஷத்தை ஏற்படுத்தும்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பதில் தடைகள் ஏற்படும். திருமணம் நடைபெறுவது தாமதமாவதுடன், இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, வெண் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.

மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயாசம் நைவேத்தியம் செய்யலாம்.

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். தினமும் இரவு மொச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மொச்சை ஊறிய தண்ணீரை அத்தி மரத்துக்கு ஊற்றிவிட்டு, மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும். வீட்டில் மரம் வளர்க்க வசதியில்லாதவர்கள், அருகிலுள்ள கோயிலில் வளர்க்கச் செய்யலாம். இதன் மூலம் மிகக் கடுமையான சுக்கிர தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

Tags:    

Similar News