முக்கிய விரதங்கள்

தந்தை இல்லாதவர்கள் வாழ்வில் வளம் பெற அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

Published On 2023-06-11 08:25 GMT   |   Update On 2023-06-11 08:25 GMT
  • ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.
  • ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரத நாட்களாகும்.

கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். தந்தை இல்லாதவர்கள் வாழ்வில் வளம் பெற சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதனால் இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்கும். சனிபகவானின் பாதிப்பு குறைந்து வாழ்வில் நிம்மதி கிடைக்கவும், சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் தீரவும் ஆவணி ஞாயிறு விரதம் அனுஷ்டிக்கலாம்.

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது

அந்த காலத்தில் விவசாயிகள் ஆவணி மாதத்தில் நன்கு விளைந்து நிற்கும் வயல்வெளிகளில் இருக்கும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி பெண்கள் நாகருக்கு புற்றில் பால் ஊற்றி இந்த நாளில் வழிபாடுகள் செய்வார்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களும், வேலையில்லாதவர்கள் வேலை கிடைக்க ராகு கேதுவான நாகர் சிலைக்கு பால் ஊற்றி வேண்டிக் கொள்ளலாம்.

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். பிறந்த ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் நிச்சயம் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம்.

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

அகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும். ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் கோவிலுக்கு சென்று நவக்கிரகத்தில் இருக்கும் சூரியனாருக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். அன்றைய நாளில் கோதுமையால் செய்த இனிப்பு வகைகளை நைவேத்யம் செய்யலாம். மேலும் கோதுமையை பக்தர்களுக்கு தானமாக வழங்கலாம். இதனால் ஒவ்வொருவர் குடும்பத்திலும் பிரச்சனைகள் நீங்கி சுபீட்சமான வாழ்வு அமையும்.

முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்க வேண்டும். அசைவ உணவை சாப்பிடாமல் சூரிய பகவானை நினைத்து விரதம் இருங்கள். ஆயிரம் பலன்களை நமக்கு ஆதவன் அள்ளித்தருவான்.

Tags:    

Similar News