முக்கிய விரதங்கள்

இன்று மார்கழி திருவாதிரை: கணவருக்காக திருமாங்கல்ய விரதம் இருக்கும் பெண்கள்

Published On 2023-01-05 01:19 GMT   |   Update On 2023-01-05 01:19 GMT
  • திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில், உபவாசம் இருந்து நோக்கும் விரதத்திற்கு மகிமை உண்டு. அது மட்டுமல்ல மாதங்களில் சிறப்பு மிக்க மாதம் மார்கழி. அந்த மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் மாங்கல்ய நோன்பு இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஐதீகம். திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மார்கழி மாதம் திருவாதிரை திருநாளில் இந்த விரதம் இருப்பது கொங்கு மண்டலத்தில் சிறப்பானதாகும். பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக சோமவார விரதம் இருப்பார்கள். ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு விரதம் இருந்து கணவனுக்காக அம்மனிடம் வேண்டிக்கொள்வார்கள். அதேபோல் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மாசி மாதத்தின் இறுதி நாளில் காரடையான் நோன்பு இருந்து இறைவனை வழிபடுகின்றனர். அதுபோலவே மார்கழி மாதம் திருவாதிரை நாளான, இன்று (வியாழக்கிழமை) முழுநிலவும் இணைந்திருக்க விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாங்கல்ய விரதம்

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்களை பிறந்த வீட்டுக்கு அழைத்து தம்பதி சமேதராக விருந்து படைத்து வாழ்த்தி திருவாதிரை களி கொடுத்து தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றனர். முதல் நோன்பு பெண் வீட்டில் தான் விஷேசமாக கடைபிடிப்பார்கள். இதில் மஞ்சளில் விநாயகர் செய்து அருகம்புல் சாற்றி, விபூதி, சந்தனம், குங்குமம், இட்டு விநாயகர் முன், ஒரு தட்டில் மாங்கல்ய சரடுகள் வைக்கப்படும். மேலும் அரசாணிக்காய், பாகற்காய், அவரைக்காய் உள்ளிட்ட முக்கியமான 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உள் கழுத்து சரடு எனும் மாங்கல்ய சரடை அணிந்து நோன்பு நிறைவு பெறும்.

இதில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, வளையல், மஞ்சள், பூ, குங்குமம் உள்ளிட்டவை கொடுப்பது வழக்கம். அதேபோல சிறுவர்கள், ஆண்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிறு கட்டி அவர்களும் மாங்கல்ய நோன்பில் பங்கெடுத்து மகிழ்வர். இதையடுத்து, திருவாதிரை நட்சத்திரத்தன்று (இன்று) இரவு சிவாலயங்களில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்து, மறுநாள் ஆருத்ரா தரிசனம் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்று, சிவன் பார்வதி அருள்பெறுவர். இச்சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசன விழா சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Tags:    

Similar News