முக்கிய விரதங்கள்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 21 நாட்கள் நடக்கும் கேதார கவுரி விரதம்

Published On 2022-09-05 05:01 GMT   |   Update On 2022-09-05 05:01 GMT
  • கேதார கவுரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • இந்த விரதம் புரட்டாசி அமாவாசை அன்று நிறைவு பெறுகிறது.

கொங்கு 7 சிவ ஸ்தலங்களில் மலை மீது அமைந்துள்ள ஒரே ஸ்தலமாகிய திருச்செங்கோட்டில் ஆண் பாதி பெண் பாதியாக அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானின் இடப்பாகத்தை பெறுவதற்காக பார்வதி புரட்டாசி மகாளய அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக தவம் இருந்ததாக புராணங்கள் சொல்கிறது.

அதன் அடிப்படையில் நேற்று திருச்செங்கோடு மலைக்கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதி பிரகாரத்தில் கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், பிரகாரத்தில் கேதார கவுரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 21 நாட்கள் நடைபெறும் கேதார கவுரி விரதம் புரட்டாசி அமாவாசை அன்று நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News