- வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனிரெண்டைக் கொண்டவன் வடிவேலன்.
- முருகன் திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்ரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.
வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனிரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.
பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்று தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜையறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.