ஆன்மிகம்

மரண பயம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம் திருக்கோவில்

Published On 2016-08-10 09:23 IST   |   Update On 2016-08-10 09:23:00 IST
எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் தான் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம்.
வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாகவே எல்லோரிடமும் உண்டு. எழுந்து நடமாட முடியாத முதியவர்கள் கூட இன்னும் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். கடும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களும், நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்களே ஒழிய, மரணம் சம்பவித்து விடக் கூடாது என்ற அச்சம் கொள்கிறார்கள். ஒருவருக்கு மரண பயம் வந்து விட்டால், எவராலும் அவரைத் தேற்ற முடியாது. மரணத்தை விடவும் கொடியது மரண பயம்.

எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் ஒன்று உள்ளது. அதுதான் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம் ஆகும். இந்த ஆலயத்தில் வாஞ்சிநாத சுவாமி என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை என்பதாகும். வாழவந்த நாயகி என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.

ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும் புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.

ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு. சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார். ‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று பெயர் பெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும் கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியதும், சரஸ்வதி நதிக் கரையில் தவமிருந்த ‘ஸர்வா’ என்ற முனிவர் துடித்துப் போனார். கலியுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ என்ற கவலை அவரை வருத்தியது. அப்போது ‘திருவாஞ்சியம்’ என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோவிலை நோக்கி ஓடினார். அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது. இதனால் முனிவர், ‘சிவாய நம.. திருவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார். பக்தனின் குரல் கேட்டு, வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை, திருவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார். ஈசன், கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது. கலியுகத்தில் நமக்கு ஏற்படும் சகல தோஷங்களையும், கிரக பீடைகளையும் களையும் திருத்தலம் திருவாஞ்சியம் ஆகும்.

காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். நாய் வாகனமும் இங்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. இத்தல பைரவரை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு மிகுந்த தனம் பெறலாம் என்கிறார்கள்.

சந்தன மரத்தை தலமரமாக கொண்ட திருவாஞ்சியம் திருக்கோவில், கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி, அருகே உள்ள கங்கைக் கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்பு தனிச்சன்னிதியில் உள்ள எமதர்மராஜனை வழிபட்டு, பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும்.

அதன் பிறகு மூலவரான வாஞ்சிநாத சுவாமியையும், மங்களாம்பிகைகளையும் தரிசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 63 நாயன்மார்கள் சன்னிதி, மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வெண்ணெய் விநாயகர், ஜேஷ்டாதேவி, பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களைக் கங்கை ஏற்கிறாள். இங்கு இருக்கும் குப்த கங்கையில் தனது 1000 கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு ரகசியமாக குப்த கங்கை என்ற பெயருடன் கங்கா தீர்த்தத்தின் நீராடிய பலனைத் தந்தருளுகிறாள். தட்சனின் யாகத்திற்கு சென்றதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட சூரியன் தனது ஒளியை இழந்தான். பின்னர் இந்த தீர்த்தத்தில் நீராடிதான் தனது ஒளியைப் பெற்றான் என்பது தல வரலாறு.

அமைவிடம் :

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாஞ்சியம். குடவாசலில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருவாஞ்சியம் திருத்தலம்.

Similar News