வழிபாடு

குழித்துறையில் இருந்து கேரளாவுக்கு இன்று சுவாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது

Published On 2022-09-24 07:41 GMT   |   Update On 2022-09-24 07:41 GMT
  • பக்தர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • நாளை சாமி சிலைகள் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டைக்கு சென்றடைகிறது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி விக்ரகங்கள் ஆண்டு தோறும் பங்கேற்பது வழக்கம்.

இதற்காக இந்த சாமி சிலைகள் குமரி மாவட்டத்தில் இருந்து யானை மற்றும் பல்லக்குகளில் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு 26-ந்தேதி நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கடந்த 22-ந்தேதி ஊர்வலமாக புறப்பட்டார்.

வழிநெடுக பக்தர்கள் கொடுத்த வரவேற்புக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னுதித்த நங்கை அம்மன் சிலை கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து குமார கோவில் முருகன், தேவார கட்டு சரசுவதி தேவி ஆகிய சாமி விக்ரகங்கள் வந்ததும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழகம் மற்றும் கேரள இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அங்கிருந்து சரஸ்வதி தேவி யானை மீதும், முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் குமார கோவில் முருகன் ஆகிய சாமி சிலைகள் பல்லக்கிலும் ஊர்வலமாக புறப்பட்டது.

இரவில் சாமி சிலைகள் குழித்துறை வந்தடைந்தது. இதில் சுவாமி சிலைகள் குழித்துறை மகாதேவர் ஆலயம் மற்றும் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து இன்று காலை குழித்துறை சாமுண்டே ஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஊர்வலம் தொடங்கியது. பக்தர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் அரசடி விநாயகர் ஆலய பக்தர்கள் சங்கம் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலமாக வந்த சாமி சிலைகளை பக்தர்கள் வழி நெடுக நின்று குலவை சப்தம் முழங்க வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட துணைச் செயலாளர் சுபாஷ் குமார், பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் சசி குமார், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் ரத்தின மணி, பிஜு, பா. ஜனதா முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாமி விக்ரகங்கள் இன்று குழித்துறை, திருத்துவபுரம், படந்தாலு மூடு வழியாக குமரி-கேரள எல்லை ப்பகுதியான களியக்காவிளையை சென்றடைகிறது. அங்கு தமிழக இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், கேரள இந்து அறநிலைய துறை அதிகாரியிடம் பாரம்பரிய முறைப்படி சாமி விக்கிரகங்களை ஒப்படைக்கின்றனர்.

அதன் பின்னர் இந்த விக்ரகங்கள் இன்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்க வைக்கப்படுகின்றன. நாளை (25-ந் தேதி) காலை ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சாமி சிலைகள் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டைக்கு சென்றடைகிறது. அதன் பின்னர் சாமி விக்கிரகங்கள் தனித்தனியாக நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் 26-ந்தேதியில் இருந்து 10 நாட்கள் கொலு மண்டபத்தில் நவராத்திரி விழாவிற்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

Tags:    

Similar News