பக்தர்கள் வெள்ளத்தில் நடந்த அழகர்கோவில் ஆடித்தேரோட்டம்
- இன்று இரவு 18-ம்படி கருப்பசாமி சன்னதி நிலை கதவுகளுக்கு சந்தன சாத்துப்படி நடக்கிறது.
- 14-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது மதுரையை அடுத்துள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.
இங்கு ஆடி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடக்கும். குறிப்பாக இந்த விழாவில் ஆடி தேரோட்டத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிதிருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது.
கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த வருடம் ஆடி திருவிழா விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4-ந்தேதி ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை, மாலையில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடந்தது. இன்று அதிகாலை சுவாமி-அம்பாளுகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. 4.15 மணிக்கு சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் திரண்டனர். காலை 6.25 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் வழக்கத்தைவிட குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் அதிக அளவில் திரண்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆடி திருவிழாவில் இன்று இரவு 18-ம்படி கருப்பசாமி சன்னதி நிலை கதவுகளுக்கு சந்தன சாத்துப்படி நடக்கிறது. நாளை (13-ந்தேதி) புஷ்ப சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி நடைபெறும். 14-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆைணயர் ராமசாமி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.