வழிபாடு

போகர் ஜெயந்தி: பழனி முருகன் கோவிலில் மரகத லிங்கத்துக்கு சிறப்பு பூஜை

Published On 2023-05-19 07:06 GMT   |   Update On 2023-05-19 07:06 GMT
  • சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
  • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை 18 சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது ஆன்மிக வரலாறு.

இதை பிரதிபலிக்கும் வகையில் பழனி முருகன் கோவில் உட்பிரகாரத்தில் போகருக்காக தனி சன்னதி உள்ளது. இங்கு புலிப்பாணி ஆசிரம நிர்வாகம் சார்பில் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் போகர் பெருமானை தரிசிப்பது வழக்கம். போகர் சன்னதியில் பிரசித்தி பெற்ற பச்சை மரகத லிங்கம் உள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி மாத பரணி நட்சத்திர நாளன்று போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு போகர் ஜெயந்தியையொட்டி நேற்று பழனி கோவில் போகர் சன்னதியில் உச்சிக்கால பூஜையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சன்னதி மண்டபம் முன்பு மரகத லிங்கம் வைக்கப்பட்டு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 14 பக்தர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஆயக்குடி அருகே பொன்னிமலை அடிவாரத்தில் உள்ள போகர் சித்தர் கோவிலில், போகர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. முன்னதாக போகர் சித்தருக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு குழு தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனிவேல், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பொன்னிமலை பகுதியில் விதைப்பந்து மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News