வழிபாடு

ஐப்பசி பரணி விழா உருவான வரலாறு

Published On 2024-11-21 03:29 GMT   |   Update On 2024-11-21 03:29 GMT
  • கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது.
  • வடக்கு பொய்கைநல்லூரில் மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

வடக்கு பொய்கைநல்லூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சிவநெறி வழுவாது, கடல் கடந்து கீழை நாடுகளுக்கு சென்று பெருவணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

தம் குலத்தில் உதித்த கற்பில் சிறந்த பெண் ஒருத்தியை மணந்து இல்லறமாகிய நல்லறத்தை நடத்தி வந்த இந்த வணிகர் இவ்வூர் கடற்கரையில் வணிக நிலையம் ஒன்று அமைத்துக்கொண்டு கடல் வணிகத்தை சிறப்பாக நிகழ்த்தி வந்தார்.


இவ்வணிகரின் துணைவியார் தினமும் உணவு சமைத்து பாத்திரத்தில் வைத்து எடுத்துச் சென்று கடற்கரை அலுவலகத்தில் தம் கணவருக்கு அன்போடு உணவு படைத்து வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

ஒருநாள் அம்மையார் தம் கணவருக்கு உணவு கொண்டு செல்லும்போது சிவனடியார் ஒருவர் எதிர்பட்டார். உடல் தளர்ந்து வாடிய முகத்தோடு எதிர்பட்ட அடியார் இந்த அம்மையாரை நோக்கி தம் பசி தீர உணவிடுமாறு வேண்டி நின்றார்.

மனம் இறங்கிய அம்மையார், சிறிதும் தாமதிக்காமல் கொண்டு வந்த இலையை அந்த இடத்திலேயே விரித்து தம் கணவருக்காக எடுத்து வந்த உணவை சிவனடியாருக்கு படைத்தார்.

பசித்துயர் தீர்த்த அடியார் அந்த அம்மையாருக்கு ஆசிகள் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார். அம்மையாரும் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு கொண்டு வருவதற்காக தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.

சிவனடியார் அம்மையாரை தடுத்து இந்த பாத்திரங்களையும், இலையையும் எடுத்துக்கொண்டு உன் கணவரின் இருப்பிடம் சென்று அவனுக்கு உணவு படை என்று கூறி அங்கிருந்து அகன்றார்.

அம்மையாரும் அடியவர் சொன்னது போல் கணவரின் இருப்பிடம் சென்று, அவரின் முன்னே இலையை விரித்து பாத்திரங்களை திறந்தார். என்ன வியப்பு! பாத்திரங்களில் உணவு குறையாமல் எடுத்து வைத்தது போல் அப்படியே இருந்தது!

அம்மையாரோ நடந்தது எதையும் சிறிதும் வெளிக்காட்டாமல் கணவருக்கு உணவு படைத்தார். அதனை உண்ட கணவர் உணவு என்றும் இல்லாத அளவுக்கு சுவையாக இருப்பதை அறிந்து தம் துணைவியாரிடம் உண்மையை கூறுமாறு கேட்டார்.

அம்மையாரோ நடந்ததை நடந்தபடியே கணவருக்கு எடுத்துரைத்தார். இதனை கேட்டு வியந்து போன மஞ்சுபத்து செட்டியார் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சிவனடியாருக்கு உணவளித்த இடத்திற்கு விரைந்தார்.

அங்கே சிவனடியாரை காணவில்லை. மணல் வெளியில் 2 திருவடிகளின் சுவடுகள் மட்டுமே காணப்பட்டன. அருகில் உணவளித்த அவரின் துணைவியாரின் 2 அடிச்சுவடுகளும் காணப்பட்டன.


இந்த திருவிளையாடலை நிகழ்த்தி அருளியவர் சிவபெருமானே என உணர்ந்து மெய் சிலிர்த்தார் வணிகர். அங்கு தோண்டி பார்த்த போது தான் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது தெரியவந்தது.

சிவனடியார் திருக்கோலத்தில் சிவபெருமானை காணும் பேறு பெற்ற தம் துணைவியாரின் தவத்தை எண்ணி மகிழ்ந்தார். தமக்கு அந்த காட்சி கிட்டவில்லையே என வேதனை அடைந்தார்.

இறைவன் இவ்வாறு சிவனடியார் திருக்கோலத்தில் எழுந்தருளி செட்டிகுல பெண்ணிடம் அமுது பெற்று உண்டது ஓர் ஐப்பசி மாதம் பரணி நாளாகும். எனவே, இந்த நாளே ஐப்பசி பரணி விழா நிகழும் நாளாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News