வழிபாடு

ஆயிரம் பொன் சப்பர தேரில் எழுந்தருளும் கள்ளழகர்

Published On 2023-05-05 09:18 GMT   |   Update On 2023-05-05 09:18 GMT
  • காலப்போக்கில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்வது நின்று போனது.
  • நூறு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் சப்பரத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் தேனூரில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனை மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியாக மாற்றியுள்ளார்.

அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தேரோட்டம் நடப்பது போல், பெருமாளுக்கும் தேர் செய்ய எண்ணினார். அதற்கு பல ஆண்டுகளாகும் என்பதால் 3 மாதத்திற்குள் சப்பரத் தேர் செய்ய எண்ணினார் மன்னர்.

இதற்காக மர ஸ்தபதியையும் அழைத்து சப்பரத்தேர் செய்ய உத்தர விட்டுள்ளார். அதன்படி மர ஸ்தபதியும் மன்னர் மனம் மகிழுமாறும், பிரமிப்பாகவும் சிறிய சப்பரத்தேர் செய்து முடித்துள்ளார். அந்த ஆண்டே சுந்தரராஜ பெருமாள் சப்பரத்தேரில் எழுந்தருளிய பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளியுள்ளார்.

குறித்த காலத்திற்குள் செய்து முடித்த மர ஸ்தபதியை பாராட்டி ஆயிரம் பொற்காசுகள் மன்னர் வழங்கி பாராட்டியுள்ளார். அன்றிலிருந்து சப்பரத்தேர் ஆயிரம் பொன் சப்பரம் என அழைக்கப்பட்டது. அதேபெயரால் தற்போதும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்வது நின்று போனது.

இதற்குரிய சப்பரத்தேர் பராமரிப்பின்றி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் முன்புள்ள மண்டகப் படியில் ஆயிரம் பொன் சப்பரத் தேர் இருந்தது.

தற்போது அந்த சப்பர தேர் சீரமைக்கப்பட்டது.அதில் கள்ளழகர் எழுந்தருள ஏற்பாடு செய்யப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் சப்பரத் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Tags:    

Similar News