வழிபாடு

கந்தசஷ்டி 3-ம் நாள்: திருச்செந்தூரில் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

Published On 2024-11-04 04:40 GMT   |   Update On 2024-11-04 04:40 GMT
  • நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
  • 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

கந்த சஷ்டி திருவிழா 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

3-ம் நாளான இன்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தும், பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News