வழிபாடு

முறைப்படியான காசி யாத்திரை செல்வது எப்படி?

Published On 2023-11-05 04:55 GMT   |   Update On 2023-11-05 04:55 GMT
  • அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
  • 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

தென்னாட்டில் இருந்து காசியாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய்து, அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். கடலில் மூழ்கி மணல் எடுத்து பின்னர் மூதாதையருக்கு சிரார்த்த காரியங்களை செய்து கொள்ள வேண்டும். பிதுர் தர்ப்பணம் முடித்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள மற்ற 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரை ஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகை-திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு சென்ற மணலை கரைக்க வேண்டும்.

காசி சென்று கங்கையில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வேஸ்வரர், அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து பிறகு கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற வேண்டும்.

பிறகு கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.

சம்பிரதாயப்படி இப்படி தான் செய்யவேண்டும். இருந்தாலும் இன்றைய அவசர உலகத்தில் யாராலும் இதை கடைபிடிக்க முடியவில்லை.

காசி பிரயாகை கயா யாத்திரை செல்ல முடிவு எடுத்த பின்னர், சம்பிரதாயமாக எவ்வாறு செல்வது என்று புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் பார்த்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் காசி அமைந்துள்ளது. காசி நகர் புனிதமான கங்கை கரையின் மேற்குக்கரையில் அமைந்துள்ளது. மோசல் சராய் ரெயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வாரணாசி ரெயில்நிலையம் உள்ளது. காசி, வாரணாசி (பனாரஸ்) அனைத்தும் ஒன்று தான்.

இவ்விரண்டு இடங்களிலும் ரெயில் ஏறி இறங்கலாம். காசி ரெயில் நிலையத்தில் இருந்து விஸ்வநாதர் ஆலயம் 3 கி.மீ. தூரம் தான். வருணாஆசி ஆகிய இரு நதிகளின் சங்கத்தளம் ஆதலால் வாரணாசி என்று பெயர். இது ஜோதிலிங்க முக்தி தரும் தலங்களில் ஒன்று.

ராமேஸ்வரம், காசி பிரயாகை என்னும் அலகாபாத், கயா முதலியவற்றை தரிசித்தால் இறை அனுபவ மும் மன நிம்மதியும் பாவங்கள் விலகி, தோஷ சாந்தி ஏற்பட்டு நிம்மதி பெறலாம்.

Tags:    

Similar News