மகத்தான வாழ்வு தரும் மண்ணார் சாலை நாகராஜர்
- ஆலயத்தின் திருவிழா வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
- 26-ந் தேதி ஆயில்ய நட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கோவிலின் முகப்புத் தோற்றம்
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு என்ற இடத்தின் அருகாமையில் அமைந்துள்ளது, மண்ணார சாலை நாகராஜா கோவில். காட்டுப் பகுதியில் மரங்களுக்கு நடுவே, தனிமையில் அமைந்திருக்கும் இந்த ஆலயமானது, நாகக் கடவுள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும்.
இங்கே சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாகர் சிலைகளை நாம் காண முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆலயத்தில் பெண் ஒருவர் தலைமை பூசாரியாக இருப்பது தனித்துவமானது. இந்த ஆலயத்தின் முக்கியமான திருவிழா, மலையாள மாதமான துலாம் (ஐப்பசி) மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும்.
கோவில் புராண வரலாறு
தன்னுடைய தந்தையை கொன்ற சத்ரியர்களை அழித்த பரசுராமர், அதோடு நிற்காமல் 22 தலைமுறை சத்ரியர்களையும் அழித்து ஒழித்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட பாவத்தில் இருந்து விடுபடுவதற்காக, மகரிஷிகள் சிலரிடம் ஆலோசனை கேட்டார்.
அப்போது அவர்கள், பிராமணர்களுக்கு ஒரு நிலத்தை தானமாக வழங்கும்படி அறிவுறுத்தினர். சொந்தமாக ஒரு நிலத்தைப் பெறுவதற்காக பரசுராமர், வருண பகவானை நினைத்து வழிபட்டார்.
பின்னர் சிவபெருமானால் வழங்கப்பட்ட 'மழு' என்ற ஆயுதத்தை சமுத்திரத்தில் இருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகி, நிலப்பகுதியாக மாறியது. அந்த இடத்தை பரசுராமர், அந்தணர்களுக்கு தானமாக வழங்கினார். அதுதான் கேரளம்.
ஆனால் ஆரம்பத்தில் அந்த இடம் உப்புத் தன்மையுடன், மரம்- செடிகள் முளைக்காமலும், வாழ்வதற்கான சூழல் இல்லாததாகவும் அமைந்திருந்தது. அதனால் தானமாக பெற்ற மக்கள், அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
இதனை அறிந்த பரசுராமர், வருத்தம் கொண்டார். உடனடியாக திருமாலை நினைத்து தவம் புரிந்தார். அவருக்கு நேரில் காட்சியளித்த திருமால், "இந்த பகுதியில் நாகராஜாவின் அருள் ஒளி பரவினால் மட்டுமே, நீ எண்ணியவை நடக்கும். நாகராஜாவை திருப்தி அடையச் செய். எல்லாம் சரியாகும்" என்று கூறி மறைந்தார்.
கேரள தேசத்தை இயற்கை அழகு நிறைந்த நாடாகவும், சகல சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாற்றிய பின்னரே, அங்கிருந்து வேறு பகுதிக்குச் செல்வது என்று பரசுராமர் தீர்மானம் செய்தார்.
தன் சீடர்களுடன், ஒரு வனாந்திர பகுதியைத் தேடி புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதியில் கடலோரத்தின் அருகில் ஒரு இடத்தை கண்டார். அங்கே தீர்த்த சாலை அமைத்து, தவம் இயற்றினார்.
அந்த தவத்தின் பயனாக அவருக்கு நாகராஜாவின் அருள்காட்சி கிடைத்தது. அவரை தலை வணங்கி வழிபட்ட பரசுராமர், தன்னுடைய வேண்டுதலை நாகராஜாவிடம் தெரிவித்தார்.
நாகராஜா தன்னுடைய அருள் கடாட்சத்தை அந்த நிலம் முழுமைக்கும் பரவச் செய்தார். அதன் மூலம் கேரள தேசம், நாக பூமியாக மாறியது.
அப்போது பரசுராமர், "நாகராஜரே.. நீங்கள் அனுதினமும் இந்த தேசத்தில் அருள் ஒளியைப் பரவச் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். அதை நாகராஜாவும் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தன்னுடை சீடர்களில் முதன்மையான விப்ரனை என்பவரை, நாக பூஜை செய்யும் அதிகாரியாக, பரசுராமர் நியமித்தார். விப்ரனையின் வம்சாவளியினருக்கு, நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார்.
வனப்பு மிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சி தரும் இந்த சாலைக்கு வந்து வழிபடுவோருக்கு நாகராஜா தனது பரிவாரங்களுடன் அருள்பாலிப்பதால். இந்த சோலை 'மந்தார சோலை' எனும் பெயரில் அழைக்கப்பட்டு, அதுவே 'மண்ணார சாலை' என்று மருவியதாக சொல்கின்றனர்.
தலைமுறைகள் பல கடந்தன. ஒரு கட்டத்தில் கேரள தேசத்தில் காட்டுத் தீ பரவி கோரத் தாண்டவம் ஆடியது. அக்னியால் பாதிக்கப்பட்ட சர்ப்பங்கள் அனைத்தும் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தங்களுடைய ராஜாவான, நாகராஜா அருளாட்சி செய்து கொண்டிருந்த மண்ணார சாலைக்கு வந்து சேர்ந்தன.
நாகராஜாவின் அருளால் காட்டுத் தீ அணைந்து, நாகங்கள் அனைத்திற்கும் அபயம் கிடைத்த புண்ணிய பூமியாக மண்ணார சாலை மாறியது.
பரசுராமர் தீர்த்த சாலை அமைத்து நாகராஜாவை வழிபட்ட இடத்தில்தான், இப்போது மண்ணார சாலை நாகராஜா திருக்கோவில் அமையப்பெற்றிருக்கிறது, என்கிறது தல வரலாறு.
இந்த ஆலயத்தில் உள்ள நாகராஜா சிலை, சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டு, அந்த விதிப்படியே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி (துலாம்) மாத ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இதில் மன்னர் வம்சத்தினரும் பங்கேற்று சிறப்பு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் திருவிழா வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் வழக்கமான பூஜைகளுடன், மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா நடக்கிறது.
25-ந் தேதி நாகராஜாவிற்கும், சர்ப்ப யட்சிக்கும் திருவாபரணம் அணிவித்து, நைவேத்தியம் படைக்கப்படும்.
26-ந் தேதி ஆயில்ய நட்சத்திர நாளில், கோவிலின் பெண் பூசாரி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நாகராஜா ஊர்வலம் நடைபெறும்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
ஆலப்புழாவில் இருந்து சுமார் 37 கிலோ மீட்டரில் உள்ளது இந்த திருத்தலம்.
சிறப்பு வழிபாடுகள்
இங்கே முக்கிய வழிபாடாக 'உருளி கவிழ்த்தல்' என்ற வழிபாடு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இங்குள்ள நாகராஜாவையும், சர்ப்ப யட்சி அம்மனையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, நீண்ட ஆயுள், வம்ச விருத்தி வேண்டியும், நோய், பில்லி - சூனிய தொல்லைகளும் அகலவும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. செல்வச் செழிப்பு, கல்வி, புகழ், தானிய விருத்தி, உடல் ஆரோக்கியம், விஷத்தன்மை நீங்கிட, நாக தோஷம் விலக என்று ஒவ்வொன்றிற்கும் தனி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.