வழிபாடு

மாசி மகம்: மெரினா கடற்கரையில் இன்று காலை 50 கோவில்களின் சிலைகளுக்கு தீர்த்தவாரி

Published On 2023-03-06 06:23 GMT   |   Update On 2023-03-06 06:41 GMT
  • சாமி சிலைகளை எடுத்து வந்த பக்தர்களும் புனித நீராடினார்கள்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் சாமி சிலைக்கு நாளை தீர்த்தவாரி நடக்கிறது.

மாசி மகத்தையொட்டி சென்னையில் கோவில்களில் இருக்கும் உற்சவர் சிலைகளை மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

திருவிழா நடக்கும் கோவில்களில் இறுதி நாளில் மகம் நட்சத்திரத்தில் கடலில் சாமி உற்சவர் சிலைகளுக்கு தீர்த்தவாரி செய்து சந்திரனை பார்த்து தீர்த்தவாரி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டேன் என்று கூறி உற்சவர் விடைபெறுதலே தீர்த்தவாரி ஆகும்.

மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை கோவில் சிலைகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மெரினா கடற்கரை யில் கோலாகலமாக தீர்த்தவாரி நடந்தது.

பூந்தமல்லி, பட்டாபிராம் ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோவில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில், மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், சூளை திரவுபதி அம்மன் கோவில், வினை தீர்க்கும் விநாயகர் கோவில், பெரம்பூர் அகரம் முருகன் கோவில், புதுப்பேட்டை கொள்ளாபுரி அம்மன் கோவில், பாலசுப்பரமணிய சுவாமி கோவில், தின்ன கடையம்மன் கோவில், சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் வராகி கோவில் உள்ளிட்ட 50 கோவில்களில் இருந்து உற்சவர் சாமி சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

கடற்கரை சென்றதும் அங்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி செய்தனர். பின்னர் சாமி சிலைகளை எடுத்து வந்த பக்தர்களும் புனித நீராடினார்கள். அதன் பிறகு அங்கு சிறப்பு பூஜை செய்தனர்.

50 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் கடற்கரை சர்வீஸ் சாலையில் வரிசையாக நின்றன. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பெருமாள் கோவில்களில் உள்ள சிலைகளை நடனமாடி எடுத்து வந்தனர். பின்னர் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் சாமி சிலைக்கு நாளை (7-ந்தேதி) தீர்த்தவாரி நடக்கிறது.

Tags:    

Similar News