மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
- ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அம்மனும், சிவபெருமானும் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி குங்குமம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு ராஜமாதங்கி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இரவு 11.15 மணிக்கு பம்பை,மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார்.பின்பு பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடினர்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி அங்காளம்மா, ஓம்சக்தி அங்காளம்மா, என கோஷமிட்டு கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து இரவு 12 மணிக்கு தாலாட்டு பாடல் பாடியவுடன் அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டியவுடன்ஊஞ்சல் உற்சவம் முடிவைடைந்தது.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.