ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் உளிட்டவை நடைபெற்றது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புகழ் பெற்ற பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஆதி கேசவ பெருமாளுக்கு 10 நாள் பிரம்மோற்சவமும், ராமானுஜருக்கு 10 நாள் அவதார உற்சவமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராமானுஜர் 1006-வது ஆண்டு அவதார திருவிழா தொடங்கி 10 நாள் நடைபெற்றது. இதில் யானை வாகனம், குதிரை வாகனம், சூரிய பிரபை வாகனம் உளிட்ட வாகனங்களில் ராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராமானுஜர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடந்து வருகிறது.
சிம்ம வாகனத்திலும், ஷேச வாகனம், ஹம்ச வாகனத்திலும், கருட வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியாளித்தார். பிரம்மோற்சவதின் 7-ம் நாளான நேற்று காலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், உளிட்டவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.