சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 22-ம்தேதி தொடங்குகிறது
- 31-ந்தேதி காலை தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
- தீமிதி திருவிழா ஆகஸ்டு 1-ந்தேதி நடைபெற உள்ளது.
சிதம்பரம் பஸ் நிலையம் எதிரே பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நாளை மறுநாள் 22-ம்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 26-ந்தேதி இரவு தெருவடைச்சான் உற்சவமும், 31-ந்தேதி காலை தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி மாலை 5 மணியளவில் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் கோவில் வளாகத்தில் அங்க பிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை பிரார்த்தனை மற்றும் காலை 9 மணிக்குமேல் தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல், மதியம் 2 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளார்கள். ஆகஸ்டு 3-ந் தேதி அன்று காலை மஞ்சள் நீர் விளையாட்டு, இரவு ஊஞ்சல் உற்சவமும், காத்தவராய சுவாமி கதை பட்டாபிஷேகத்துடன் ஆடி மாத தீமிதி திருவிழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.