பல்லடம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பொங்கல் திருவிழா
- 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
- நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ்பெற்ற திரவுபதி அம்மன் - தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க பெண்கள், சிறு வர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜை நடை பெற்றது. மாலையில் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டம் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.