செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2017-03-22 06:13 GMT   |   Update On 2017-03-22 06:13 GMT
கோர்ட்டு உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நீர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது ஏற்கனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கர்நாடக முதல்-அமைச்சர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று மீண்டும் பிடிவாதம் செய்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய அரசு உடனடியாக கர்நாடக அரசை கண்டித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்த வேண்டும்.

மேலும் காவிரி ஆற்றின் துணை நதியான பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைக்கட்டுவதற்கு சாதகமான ஆவனங்களை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்தது.


ஆனால் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்ட கூடாது என்பதற்கு தகுந்த ஆதாரங்களை உச்சநீதி மன்றத்தில் அளிக்க தமிழக அரசு தவறிவிட்டது. இது தொடர்பாக இன்னும் 15 நாட்களுக்குள் தமிழக அரசு உரிய ஆவனம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

எனவே தமிழக அரசு நதிநீர் விவகாரத்தில் மெத்தனப் போக்கை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்டினால் தமிழகத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்காது என்பதற்கு தகுந்த ஆதாரங்களை உடனடியாக தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து செயல்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் தடுப்பணைக் கட்டும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதற்கு தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் எடுத்து தமிழக உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News