செய்திகள்

தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் வேலுமணி

Published On 2017-03-22 07:54 GMT   |   Update On 2017-03-22 07:54 GMT
தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது பற்றிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கொண்டுவந்தனர். தி.மு.க உறுப்பினர் பிச்சாண்டி இதுபற்றி பேசியதாவது:-

தற்போது தமிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகள் இல்லாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி இருக்கிறது. கிராமப்புறங்களில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அவல நிலை இருக்கிறது. 146 கூட்டு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன. காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அங்குள்ள முதல்வர் தண்ணீர் தர முடியாது என்கிறார். இது பற்றி அவருடன் தமிழக முதல்-அமைச்சர் பேசி குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் தண்ணீர் பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.



சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளில் மொத்த கொள்ளளவு 11 ஆயிரம் மில்லியன் கனஅடி. ஆனால் தற்போது 1 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. சென்னை மக்களுக்கு முன்பு தினமும் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது இது 530 மில்லியன் லிட்டராக குறைந்து விட்டது. இது மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் நிலைமை மோசமாகும். எனவே பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

தற்போது தமிழ்நாட்டில் 62 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் தலைமையில் பல ஆய்வுக்கூட்டங்கள் நடந்தது. எனது தலைமையிலும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்திருக்கிறது.

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ. 926 கோடியே 75 லட்சம் செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி புதிய ஆழ்துளைக்குழாய் கிணறுகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள ஆழ் துளைக்கிணறுகளை மேலும் ஆழப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீரை அனைவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரங்களும் நடந்து வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு தற்போது தினமும் 550 மில்லியன் குடிநீர் வழங்கப்படுகிறது. இது குறையாத அளவுக்கு வழங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது ஒரு பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்தால் அது குறித்து சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஏற்பாடு செய்யப்படும். இது இயற்கையினால் வந்த பிரச்சினை என்றாலும் போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News