செய்திகள்

‘இரட்டை இலை’க்கு இரண்டாவது சோதனை

Published On 2017-03-22 10:15 GMT   |   Update On 2017-03-22 10:15 GMT
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து 2-வது முறையாக இரட்டை இலைக்கு சோதனை வந்துள்ளது. இதில் இரட்டை இலை தப்பி வருமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
சென்னை:

ஒரு அரசியல் கட்சிக்கு தலைவர் எந்தளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு அந்த கட்சிக்குரிய சின்னமும் முக்கியமாகும்.

தேர்தல் காலங்களில் தலைவர்கள் வேட்பாளர்கள் ஆதரவு கேட்டு வராவிட்டாலும் கூட சின்னம் அதை ஈடு செய்துவிடும். அந்த அளவிற்கு கட்சிகளின் தேர்தல் சின்னங்களுக்கு மவுசு உண்டு.

குறிப்பாக தமிழ்நாட்டில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளின் உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களுக்கு உள்ள மதிப்பும், மரியாதையும், சிறப்பும் இந்தியாவில் வேறு எந்த கட்சிகளின் சின்னங்களுக்கும் இல்லை என்று சொல்லலாம்.

உதயசூரியன் சின்னத்தை 1958-ம் ஆண்டு தி.மு.க. பெற்றது. அடுத்த ஆண்டு அந்த சின்னத்திற்கு வைர விழா ஆண்டாகும். தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் உதயசூரியன் சின்னம் ஊடுருவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கண்டெடுத்த இரட்டை இலை சின்னம் ஏழை-எளிய மக்களின் ரத்த நாளங்களில் இரண்டற கலந்து விட்ட மகத்துவத்தை பெற்றது.

அ.தி.மு.க. என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். முகம் எப்படி நினைவுக்கு வருகிறதோ அதுபோலவே இரட்டை இலை சின்னமும் ஒவ்வொருவர் மனதிலும் வந்து செல்லும்.

1973-ல் முதன் முதலாக திண்டுக்கல் தேர்தலில் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வுக்காக இரட்டை இலை சின்னத்தை பெற்றார். அன்று தொடங்கி கடந்த 44 ஆண்டுகளாக இரட்டை இலை சின்னம் தமிழக அரசியல் களத்தை ஆர்ப்பரிக்க செய்யும் வெற்றி சின்னமாக திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இரட்டை இலை சின்னம் எம்.ஜி.ஆர். மரணத்தை தொடர்ந்து 1989-ம் ஆண்டு முதல் தடவையாக சோதனையை சந்தித்தது. அப்போது அ.தி.மு.க. ஜெ-ஜா என 2 அணிகளாக பிரிந்ததால் யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்பட்டது.

தற்போது ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து 2-வது முறையாக இரட்டை இலைக்கு சோதனை வந்துள்ளது. இதில் இரட்டை இலை தப்பி வருமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

அ.தி.மு.க. வரலாற்றில் அந்த கட்சி இதுவரை 3 தடவை பிளவை சந்தித்துள்ளது. 1984-ம் ஆண்டு முதன் முதலாக எம்.ஜி.ஆரை எதிர்த்து எஸ்.டி.சோம சுந்தரம் தனியாக பிரிந்தார்.

நமது கழம் என்ற கட்சியை அவர் தொடங்கி எம்.ஜி.ஆர். மீது 100 குற்றச்சாட்டுகளை பரபரப்பாக வெளியிட்டார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பிசுபிசுத்து போனது.

இதனால் போனி ஆகாத எஸ்.டி.சோமசுந்தரம் வேறு வழி இல்லாமல் 1987-ம் ஆண்டு தனது கட்சியை அ.தி.மு.க.வுடன் இணைத்து விட்டு எம்.ஜி.ஆரிடம் சரண் அடைந்தார்.

அடுத்து ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. செயல்பட்ட போது 1988-ம் ஆண்டு நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், அரங்க நாயகம் ஆகிய 4 பேரும் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி போர்க்கொடி தூக்கினார்கள்.


நால்வர் அணி என்று அழைக்கப்பட்ட அவர்கள் சில மாதங்களுக்கு கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அடுத்த ஆண்டே அவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்கள்.

1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக திருநாவுக்கரசர் வெகுண்டு எழுந்தார். அ.தி.மு.க.வை கைப்பற்ற போவதாக அறிவித்தார்.

அ.தி.மு.க.வின் 14 எம்.பி.க்களில் 7 எம்.பி.க்கள் அவரை ஆதரித்தனர். இதனால் தைரியமான அவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார்.

ஆனால் அவரால் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்ய இயலவில்லை. அவரது எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வும் கடலில் கரைத்த பெருங்காயமாக போனது.

இதனால் அவர் முதலில் பாரதிய ஜனதாவுக்கு போனார். இப்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

இப்படி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. மிக வலுவான இயக்கமாக இருந்த போது யாருமே அவர்களை எதிர்த்து அரசியல் செய்ய இயலவில்லை.

எதிர்ப்பு அணியினர் செய்த சலசலப்புகள், சர்ச்சைகள், கோ‌ஷங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். என்ற மந்திர புன்னகை முன்பும் ஜெயலலிதா என்ற சிங்கத்தின் முன்பும் எடுபடவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரிடமும் எதிராளிகள் சரண் அடையவே செய்தனர்.

தற்போது 4-வது முறையாக அ.தி.மு.க. பிளவுபட்டுள்ளது. இப்போதும் அ.தி.மு.க. வரலாற்றில் முன்பு ஏற்பட்டது போன்ற நிகழ்வுகள் நடக்குமா? அல்லது புதிய அத்தியாயம் எழுதப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அ.தி.மு.க.வை வழி நடத்திய எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவர்களாக இருந்தனர். எனவே எந்த சலசலப்பும் அவர்களிடம் செல்லுபடி ஆகவில்லை.

ஆனால் தற்போது அ.தி.மு.க. தலைமை மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. எனவே பிளவுபட்ட அ.தி.மு.க. எத்தகைய பாதையை நோக்கி செல்லும் என்பதிலும் கேள்வி குறி எழுந்துள்ளது.

பொதுவாக அ.தி.மு.க. வில் சலசலப்பு ஏற்பட்ட போதெல்லாம் அவை அடுத்து வந்த தேர்தலில் சரியாகிவிடும். தற்போதும் அதுபோன்று சலசலப்புக்கு மத்தியில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது.

அது தரப்போகும் முடிவு எந்த அணியை வாழ வைக்கும் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.

Similar News