மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை 1000-வது கும்பாபிஷேக விழா- இந்து அறநிலையத்துறை ஏற்பாடு
- விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர்.
- விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 1000-வது கும்பாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பில் விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து, அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது.
காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டும் நடைபெறும். பின்னர் அனைத்து பரிவாரங்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.